Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
`நாட்டுக்கு நல்லது செய்வேன்...' சுதா ரகுநாதன்
சுதா ரகுநாதனின் பளிச் புன்னகையில் நனைந்து, அவர் வீட்டிற்குள் நுழைந்தால் வரவேற்பறையில் `ஹாயாக' படுத்திருக்கிறார், அனந்த சயன விநாயகர்.
 
"உனக்கு நான் எல்லாவற்றையும் தந்திருக்கிறேன். மகிழ்ச்சியாக நீ வாழ்க்கை நடத்துவதை நான் ஹாயாகப் படுத்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருக் கிறேன் என்று சொல்வது போல் அவரது படுக்கை அமைந்திருக்கிறது. அவர் கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும் எப்போதும் அவர் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை நானும் மறப்பதில்லை..' '- என்று சுதா ரகுநாதன் கூறும்போது, வீடு முழுக்க ஆங்காங்கே இடம் பிடித்திருக்கும் 200-க்கும் மேற்பட்ட விநாயகர்கள் அதை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
இவர் இசைக்காக எந்நாளும் பறந்து கொண்டிருக் கிறார். இன்று அமெரிக்கா.. நாளை ஆஸ்திரேலியா என்று சொல்லும் நிலை..!
 
சென்னை, வீட்டில் இருந்தால் ஒரு நாள் எப்படி தொடங்குகிறது?
 
"காலை 7 மணி வாக்கில் விழித்து சமையல் அறைக்கு செல்வேன். சமையலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துவைப்பேன். வேலைக்கார பெண் வந்து சமைப்பார். ஆனால் நான் சமைப்பது ரொம்ப நல்லா இருக்கிறது என்பாள் என் மகள். நானும், வேலைக்காரப் பெண்ணும் ஒரே மாதிரியான சமையல் பொருட்களைத்தான் சேர்க்கிறோம். ஆனால் நான் அன்பையும் சேர்த்து சமைக்கிறேன். அதனால் அது அதிக சுவையாகிவிடுகிறது. மனதுதான் எல்லாவற்றிற்கும் காரணம். எதையும் ஆத்மார்த்தமாக செய்தால் அதில் ஈர்ப்பும், உயிர்ப்பும் வந்து விடும்..'' -என்கிறார்.
 
சமையல் அறையில் இவர் கைவண்ணத்தில் எரிசேரி, அவியல், உருளைக்கிழங்கு ரோஸ்ட் போன்றவை அதிக ருசி பெறுமாம்.
 
அதே ரசிப்போடு, ருசிப்போடு இவர் இசையை பற்றிப் பேசுகிறார்..
 
"நான் எத்தனை ஆயிரம் கச்சேரிகள் செய்திருந்தாலும் இப்போதும் ஒவ்வொரு மேடையிலும் எனக்கு லேசான பயம்தான். கச்சேரி கேட்க ஆயிரம் பேர் வந்திருந்தால், அவர்களில் 50 பேரின் ரசனையை உடனே என்னால் புரிந்துகொள்ள முடியும். மீதமுள்ள 950 பேர் ரசிக்க வந்தார்களா, பொழுது போக்க வந்தார்களா என்பதை எல்லாம் புரிய கச்சேரி ஆரம்பித்த பின்பு இன்னொரு பத்து நிமிடம் தேவை. இதே கணிப்பு நாட்டுக்கு நாடு, மேடைக்கு மேடை மாறுபடும். சமர்ப்பண உணர்வு, முழுஈடுபாடு இருந்தால் எல்லோரையும் திருப்திபடுத்தி வெற்றியடைந்துவிடலாம்''- என்கிறார்.
 
இவரது வீட்டைப் பார்க்கும்போது, இவர் கலை ரசனையில் ரொம்ப வித்தியாசமானவர் என்பது புரிகிறது.
 
"ஒவ்வொரு நாளும் எனக்கு புதுப்புது விஷயங்களை புரியவைக்கிறது. புதிதாக எதையாவது செய்ய வேண்டும். வித்தியாசமாக எதையாவது உருவாக்க வேண்டும் என்பது என் ஆசை. மாதத்தில் ஒரு தடவை இந்த அறையில் இருக்கும் பொருட்களை எல்லாம் அப்படியே எடுத்து மாற்றி, இங்கே வேறு பொருட்களை அடுக்கிவிடுவேன். என் புடவை அலமாரியை புது விதமாக அடுக்கி அலங்காரம் செய்வேன். வீட்டிற்கு வந்ததும் அலங்காரங்களை எல்லாம் அகற்றிவிட்டு, ரொம்ப சிம்பிளாக சுடிதாருக்கு மாறிவிடுவேன். நான் சீரியசான ஆள் இல்லை. இயல்பாக, மகிழ்ச்சியாக வாழ்க்கையை ரசிக்கிறேன்''
 
நீங்கள் கச்சேரி நடத்தும்போது உங்கள் இசைக்கும், உங்கள் அழகுக்கும் சின்னதாக ஒரு போட்டி நடக்குமா?
 
"இசை ஞானம் இல்லாவிட்டால் எந்த அழகும் பலன்தராது. ரசிகர்கள் இப்போது எங்களைப் போன்ற பாடகிகளை உற்றுப் பார்க்கிறார்கள். நான் அணிந்திருக்கும் மோதிரங்களைக்கூட கவனிக்கிறார்கள். `மேடம் நீங்கள் போட்டிருக்கும் புதிய மோதிரங்கள் இரண்டும் அழகாக இருக்கின்றன' என்று சொல்பவர்கள் உண்டு. அதனால் அழகாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அழகு நமக்கும் மகிழ்ச்சி. கச்சேரியை பார்க்க வருபவர்களுக்கும் மகிழ்ச்சி..''
 
கை விரல்களில் 15-க்கும் மேற்பட்ட மோதிரங்களை அணிந்திருக்கிறீர்களே?
 
"அன்புப் பரிசாக கிடைத்த மோதிரங்கள் முப்பதுக்கு மேல் இருக்கின்றன. அன்புக்கு நாம் எப்போதும் அடிமைதானே..! வாய்ப்பு கிடைக்கும்போது அவைகளை அணிந்து அன்புக்கு மரியாதை செய்கிறேன்..''
 
உங்களை நினைக்கும் போதே மின்னல் அடிப்பது போன்ற சிரிப்பும் நினைவுக்கு வருகிறது...?
 
"இது இயற்கை சிரிப்பு. நான் சிரித்தால் எனக்குள் இருக்கும் இறுக்கம் போகிறது. என்னை பார்ப்பவர்களும் இறுக்கம் நீங்கி இயல்புக்கு வருகிறார்கள். சிலர் சிரிப்பு பெரிய சொத்து. அதை செலவழிக்காமல் சேர்த்துவைக்க வேண்டும் என்று கருதி தங்கள் வீட்டையும், அலுவலகத்தையும் இறுக்கமாக்கி விடுகிறார்கள். நான் சிரிப்பது மட்டுமல்ல, மற்றவர்கள் சிரிப்பது எந்த வகையைச் சேர்ந்தது என்றும் கண்டுபிடித்துவிடுவேன். சிரிப்பில் பல வகை இருக்கிறது''
 
உங்களை அழகு படுத்துவதில் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்கிறீர்கள்?
 
"சங்கீதமே ரொம்ப அழகானது. இந்தத் துறையில் இருப்பவர்கள் அழகாகவே இருப்பார்கள். அதனால் இளமையாக தோன்றுவார்கள். தொடர்ந்து பயணம், கச்சேரிகள் என்று இருந்தால் உடல் அலுத்து முகத்தில் சோர்வு தெரியும். அப்போது மட்டுமே அழகுபடுத்துதல் பற்றி நான் சிந்திப்பேன். எல்லா சாதனைகளுக்குப் பின்னாலும் மன அழுத்தம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். அதைக் கட்டுப்படுத்தவும் தெரியும். தினமும் தியானம் செய்கிறேன். அது அழகு, அமைதி, ஆரோக்கியம் போன்ற அனைத்தையுமே தருகிறது. வீட்டில் மட்டுமல்ல, விமானத்தில் பறக்கும் போதும் என்னால் தியானம் செய்ய முடியும்''
 
சாப்பாட்டில் நீங்கள் கொள்ளும் அக்கறை?
 
"நிறைய சாப்பிட்டால் உடல் மந்தமாகிவிடும். நான் எதையும் தேடித்தேடி சாப்பிடுவதில்லை. தேவைக்கு மட்டுமே சாப்பிடுகிறேன். சாப்பாட்டைவிட எனக்கு தூக்கம் ரொம்ப பிடிக்கும். தினமும் 7 மணிநேரம் ஆழ்ந்து தூங்குவேன்''
 
சுதா ரகுநாதனிடம் பள்ளிப் பருவத்திலே உருவாகிய சேவை எண்ணம், எத்திராஜ் கல்லூரியில் படித்தபோது துளிர்விட்டு வளர்ந்திருக்கிறது. இசையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இவர் சிறந்துவிளங்கியதால், கல்லூரியில் பயின்ற மூன்று வருடங்களும் `சிறந்த மாணவி' யாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 15 வயதில் மேடை கச்சேரிகளில் தோன்றிய இவர், 18 வயதில் தொழில்ரீதியாக கச்சேரி செய்யும் அளவிற்கு உயர்ந்தார். தான் கச்சேரியில் வளர்ந்த அளவிற்கு சேவையிலும் வளர நினைத்து, சமுதாயா பவுண்டேஷன் என்ற சேவை அமைப்பை உருவாக்கியுள்ளார்.
 
சேவை அமைப்பை உருவாக்கும் எண்ணம் எப்படி உருவானது?
 
"நான் இசையில் இந்த அளவிற்கு உயர்ந்தது, இந்த மக்களால். அவர்களிடம் இருந்து அங்கீகாரத் தையும், அன்பையும், வாஞ்சையையும் பெற்றுக் கொண்டிருக்கும் நான், பதிலுக்கு அவர்களுக்கு என்ன கொடுப்பது என்று யோசித்தேன். இந்த சமூகத்திற்காக கொடுக்க நினைப்பதை சமுதாயா பவுண்டேஷன் மூலம் செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு தெரிந்தவர்களிடமும் கேட்கிறேன். கொடுக் கிறார்கள். இதுவரை 77 லட்சம் ரூபாய் உதவி செய்திருக்கிறோம். விரைவில் அது ஒரு கோடியை எட்டும்''
 
உதவும் குணம் யாரிடம் அதிகமாக இருப்பதாக உங்கள் அனுபவத்தில் உணருகிறீர்கள்?
 
"பணம் குறைவாக இருப்பவர்களிடம்தான் உதவும் குணம் அதிகமாக இருக்கிறது. சுதாவே வந்திட்டாங்க என்று சொல்லிக்கொண்டு என்ன ஏதென்று கேட்காமல் 5 ஆயிரம் ரூபாய் தரும் நடுத்தர வர்க்கத்தினர் மிக அதிகம். ஆனால் ஐம்பது கேள்விகளை கேட்டுவிட்டு, ஒன்றுமே தராத பணக்காரர்களும் உண்டு. உதவி செய்ய தீர்மானிப்பது பணம் அல்ல மனம்தான். லட்சங்களில் தருபவர்களும் இருக்கிறார்கள். பணம் தராதவர்களை நான் குறை சொல்வதில்லை. அவர்கள், அளவிற்கு அதிகமாக உதவி செய்துவிட்ட பின்பு நான் அவர்களிடம் போய் கேட்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம். அவர்களை நான் சந்தித்த சூழ்நிலைகூட பொருத்தமற்றதாக இருக்கலாம். கிடைக்கும் பணத்தை பல்வேறு அமைப்புகளுக்கு உதவிவிட்டோம். எங்கள் உதவி தொடர்ந்துகொண்டே இருக்கும்''
 
நீங்கள் கல்லூரியில் படிக்கும் போது அழகுப் போட்டியில் பங்கு பெற்றீர்களா?
 
"பங்கு பெற்றேன். ஆனால் ஜெயிக்கவில்லை. இப்போது முன்பை விட என் அழகு அதிகரித்திருப்பதாக நினைக்கிறேன்''
 
அப்படியானால் பாடகிகளுக்கெல்லாம் ஒரு அழகிப் போட்டிவைத்தால் நீங்கள் ஜெயித்து விடுவீர்களா?.. என்று நாம் கேட்க அவர் பதிலுக்கு கம்பீரமாக சிரிக்கிறார். அதற்கு அர்த்தம், ஜெயித்துவிடுவேன் என்பது போலிருந்தது.
 
இவரது கணவர் ரகுநாதன் இசை தொடர்புடைய நிறுவனம் நடத்துகிறார். மகன் கவுசிக், மகள் மாளவிகா இருவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் 15-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி இருக்கும் இவர், பத்மஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார்.
 
"மனித மனதையும், உடலையும் இசையால் மேம்படுத்த முடியும் என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பது என் ஆசை. அது நிறைவேறும்..'' என்கிறார் சுதா ரகுநாதன், மின்னல் புன்னகையோடு..!