Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
தேசத்தின் குரல்... மீராகுமார்!
இந்தியப்பெண்களின் முன்னோடி மீராகுமார். பாராளுமன்ற சபாநாயகரான இவர் பல்வேறு சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.
 
* மீரா குமார் ஐந்து முறை எம்.பி.யாக இருந்துள்ளார். இந்திய வெளிநாட்டுச் சேவையில் இணைந்த, திருமணமான முதல் பெண் இவர்.
 
*உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் தொகுதியில் கடந்த 1985-ம் ஆண்டு போட்டியிட்ட மீரா குமார், மாயாவதி, ராம் விலாஸ் பாஸ்வான் போன்ற பெருந்தலைகளை வீழ்த்தினார்.
 
*2000-ம் ஆண்டில் கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் இருந்து மீரா குமார் வெளியேறினார். 2002-ல் மீண்டும் கட்சியில் இணைந்தார்.
 
* கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் இவர் பீகாரின் சசராம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்றிருக்கிறார்.
 
அவரது பேட்டி...
 
"அரசு நிர்வாகத்தில் இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள்... இது ஒரு படி கீழேயா?''
 
"இல்லை. இது விரும்பி எடுத்த முடிவுதான். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி எனது தந்தையை (மறைந்த ஜெகஜீவன் ராம்) சந்தித்து, நான் அரசுப் பணியை விட்டுவிட்டு அரசியலில் இணைய வேண்டும் என்று கேட்டார். எனது தந்தையும் அதற்கு ஒப்புக் கொண்டார். தந்தை சொன்னபடி நான் உடனே அரசுப் பணியிலிருந்து விலகினேன். நாங்கள் எங்கள் பெற்றோருக்கு அவ்வளவு மதிப்புக் கொடுத்தோம். பெற்றோர் எங்களுக்காக ஒரு முடிவெடுத்தால் அது நன்மைக்காகத்தான் இருக்கும் என்று ஒப்புக்கொண்டோம். எனக்கு அது பெரும் மாற்றம்தான்.''
 
"தந்தை அந்த முடிவெடுத்திருக்காவிட்டால் நீங்கள் அரசியலில் இணைந்திருக்க மாட்டீர்களா?''
 
"இக்கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒருவேளை அரசியலுக்கு வராமல் சமூகப் பணிக்குப் போயிருக்கலாம். அதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு. ஆரம்பத்தில் எப்போதும் எல்லோரும் என்னை எனது தந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுவார்கள். அது எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதுவே எனது சொந்தத் தடத்தைப் பதிக்கவும் ஊக்கமாக அமைந்தது.''
 
"இந்தியாவில் பெரும்பாலான பெண்கள், ஆண்களின் தாக்கத்தால் தானே அரசியலுக்கு வருகிறார்கள்?''
 
"பெண்கள் அவர்களாக முடிவெடுத்து அரசியலுக்கு வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் சமூகத்தில் வாழ்கிறோம். இந்த நிலை அரசியலில் மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் உண்டு.''
 
"நாம் ஜாதி ரீதியான ஒதுக்கீட்டைத் தொடர வேண்டுமா? ஒரு தலித் தலைவராக இது குறித்து உங்கள் கருத்தென்ன?''
 
"இந்திய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு ஒதுக்கீடு இருந்து வருகிறது. அதன்பின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு ஏற்படுத்தப்பட்டது. முந்தைய காலத்தில் இழைக்கப்பட்ட சமூக அநீதியைச் சரிசெய்யும் விதமாக இது மேற்கொள்ளப்பட்டது. இடஒதுக்கீட்டு முறையில் சில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் இதைவிடச் சிறந்ததொரு தீர்வை நாம் எட்டும் வரையில் இதுவே நல்லது. எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு என்று பல்வேறு ஒதுக்கீடுகள் உள்ளன. இங்கு பொருளாதாரப் பிரச்சினை மட்டுமின்றி, சமூகவியல் பிரச்சினையும் இருக்கிறது. நமது மனோபாவம் தொடர்ந்து ஜாதி ரீதியாக வேரோடிப் போயிருக்கிறது. ஜாதி ரீதியான ஒதுக்கீடு குறித்துக் கேள்வி கேட்பவர்களை நான் திருப்பிக் கேட்கிறேன்.

முற்போக்கானவர்களால் அதிகமாகப் படிக்கப்படுவதாகக் கூறப்படும் ஆங்கிலத் தினசரிகளில், `வரன் தேவை' விளம்பரங்களில் தொடர்ந்து ஜாதி தெளிவாகக் குறிப்பிடப்பட்டு வருகிறதே? உண்மையில் ஜாதி ரீதியான பாகுபாடு இல்லையென்றால், திருமணத்தில் ஜாதிக்கு ஏன் முக்கியத்துவம்?''

"சபாநாயகராக உங்களை நியமித்தது பற்றி... ''
"இது ஒரு பெரிய வாய்ப்பு. இதற்கான நன்றியறிதலோடு நான் இருக்கிறேன். ஆனால் இதற்கான `ரியாக்ஷன்' குறித்து நான் கவலைப்படவில்லை.''
"குற்றப் பின்னணி இருப்பதாகக் கூறப்படும் எம்.பி.க்கள் குறித்து சபாநாயகராக உங்கள் கருத்து என்ன?''
"குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் முயன்று வருகிறது. ஆனால் நமது அமைப்பில், குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை அப்பாவி தான். வேறு நாடுகளில் இது அப்படியே மாறியிருக்கலாம். இங்கே ஒருவரை `கிரிமினல்' என்று அறிவிப்பதற்கு அவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.''
"ஆனால் சிறையில் இருந்தே சிலர் தேர்தலில் போட்டியிட்டதெல்லாம் நடந்திருக்கிறதே...''
"இந்த முறையுமா? (15-வது லோக்சபா தேர்தல்) எனக்கு அது உறுதியாகத் தெரியவில்லை. குற்றப் பதிவு உடையவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்பதில் தலைமைத் தேர்தல் ஆணையர் உறுதியாக இருக்க வேண்டும். இதைக் கூறும் அதே நேரம், இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் தீவிரமான பணிகளைச் செய்துள்ளது, நிறைய முன்னேற்றமும் கண்டுள்ளது என்பதை நான் அறிவேன்.''
"நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது போன்ற விஷயங்கள் நிலுவையில் இருக்கின்றனவே? முடிவில்லாமல் நீளும் விசாரணை, தண்டனை நிறைவேற்றப்படாதது என்று நாடாளுமன்றம் தவறான சமிக்ஞை எதையும் வெளியிடுகிறதா? கசாப் விசாரணையும் நீண்டு கொண்டே போகிறது...''

"அப்சல் குரு விஷயம் ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ளது. மேலும் பல விஷயங்களும் நிலுவையில் உள்ளன. அவை முன்னுரிமை அடிப்படையில் `கிளியர்' செய்யப்பட வேண்டும்.''
 
"நாடாளுமன்ற கட்டிடத்தில் உடனடியாக செய்யப்படவிருக்கும் மாற்றங்கள் என்னென்ன?''
"நமது நாடாளுமன்றம் பாரம்பரியப் பெருமை வாய்ந்த கட்டிடம். பழமையான இக்கட்டிடம் வலுப்படுத்தப்பட வேண்டும். அதற்காக ஒரு தொழில்நுட்பக் குழுவை அமைத்துள்ளோம். மேலும், சூரிய சக்தியைப் பயன்படுத்துவது தொடர்பாக எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லாவுடன் பேசியிருக்கிறேன். உடல் ஊனமுற்றோருக்காக இங்கு சரிவுப் பாதையும் அமைக்கப்படவிருக்கிறது.''
"நீங்கள் மென்மையாகப் பேசும் பெண்மணியாகவே இருந்து வருகிறீர்கள். எப்போதாவது நீங்கள் குரலை உயர்த்தியது உண்டா?''
"நானும் கூட சில வேளைகளில் பொறுமையை இழந்து குரலை உயர்த்துகிறேன். எனக்கு எப்போதும் சவால்கள் பிடிக்கும்.''
மென்மையாகவே பேசி முடிக்கிறார் மீராகுமார்.