மதுரையை ஒட்டிய கடவூர் கிராமத்தில் உயர் சாதி, தாழ்த்தப்பட்ட சாதியினரிடையே பகை. காலனி சிறுமி கோவில் தேரில் ஏறியதற்காக ஊர் தலைவர் அடித்து சித்ரவதை செய்கிறார். காலனி இளைஞர்கள் ஹரீஷ், கோபால், அலெக்ஸ், லோகேஷ் நால்வரும் உயர் சாதியினருக்கு பாடம் புகட்ட கோவில் தேரையே இழுத்து வந்து குப்பத்தில் நிறுத்துகின்றனர். போலீசில் அவர்களை பிடித்து கொடுக்கிறார் தலைவர். பதிலடியாக அவரது மகளுக்கு முத்தம் கொடுத்து விட்டு ஊரை விட்டே தப்பி ஓடுகிறார்கள்.
சென்னை வரும் அவர்கள் சிறு குற்றங்கள் செய்கின்றனர். ஷம்முவை அவர் மாமன் ரவிமரியா பணக்கார மார்வாடிக்கு விற்கிறார். அவர்களிடம் இருந்து காப்பாற்றி தங்களுடன் வைத்துக் கொள்கின்றனர். ஷம்மு வெளிநாடு போய் படிக்க ஆசைப்படுகிறார். அதற்காக நண்பர்கள் பணம் புரட்டுகின்றனர். இன்னொரு புறம் ஷம்முவை கடத்த அடியாட்கள் சுற்றுகின்றனர். அவர்களுடன் நடக்கும் மோதலில் மூன்று பேரை கொல்கின்றனர்.
போலீஸ் அதிகாரி பொன்வண்ணன் தனக்காக ஒரு கொலை செய்தால் கொலை வழக்குகளில் உங்களை தப்பிக்க வைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறார். அந்த கொலையையும் செய்கின்றனர். பிறகு நடப்பது மனதை உறைய வைக்கும் கிளைமாக்ஸ்.
இரு வகுப்பினரின் மோதலும் காலனி இளைஞர்களின் கோபமும் கிராமிய மணத்தோடு விறுவிறு காட்சிகளாக நகர்கிறது. ஹரிஷ், கோபால், அலெக்ஸ், லோகேஷ், கேரக்டருக்கு கச்சிதமாய் பொருந்துகின்றனர். பன்றியை விரட்டி வேட்டையாடும் ஆரம்பமே அமர்க்களம். காலனி பெண்ணை ஏமாற்றி மணந்து மோசம் செய்த தலைவர் மகனை சாகடித்து காய்ந்த மிளகாய் வற்றல் கொட்டி புதைப்பது.. பகீர்.
சென்னைக்கு தப்பி வந்ததும் ஷம்மு அறிமுகமாவது திருப்பம். அவருக்கு உதவ சபல பெண்ணிடம் ஆசை காட்டி பணம் பறிப்பது... ரவுடி மகளை கடத்துவது கலகலப்பானவை துப்பாக்கியால் ஒவ்வொருத்தரை சுட்டுக்கொல்வது இறுக்கம். கொலைகளை சாதாரணமாக எடுத்து ஷம்மு அவர்களோடு ஒட்டிக் கொண்டு திரிவது அழுத்தம் காட்டவில்லை. தாதாவை கொன்றுவிட்டு தப்பும் நண்பர்கள் ரவுடிகள் கூட்டத்தினரிடமே சிக்குவது பதற வைக்கிறது.... கிளைமாக்ஸ் குப்பை மேடு பாத்ரூம் காட்சிகளும் போலீஸ் அதிகாரியை பழி வாங்க அவரது மனைவியை கடத்தி கட்டி வைத்து உடல் உறவு காட்சயை பார்க்கும் படி மிரட்டுவதும் குமட்டல்.
ஷம்மு வருகைக்கு பின் நண்பர்கள் வாழ்வை நல்ல விதமாக மாத்தி யோசித்து இருந்தால் சிம்மாசனம் ஏறி இருக்கும். ரவி மரியா, ஜி.எம்.குமார், ஜே.எஸ். வில்லத்தனத்தில் மிரட்டு கின்றனர். காட்சிகளை திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் நந்தா பெரியசாமி, விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் ஒளிப்பதிவும் குரு கல்யாண் இசையும் கைகோர்த்து தூக்கி நிறுத்துகின்றன.