கிராமத்தில் இருந்து சென்னைக்கு படிக்க வரும் இளைஞன் வீரசமர். வறுமையால் சுடுகாட்டு கொட்டகையில் தங்கியும், ஆட்டோ ஓட்டி கல்லூரி பீஸ் கட்டியும், வாழ்வை ஓட்டுகிறார்.
அதே கல்லூரியில் படிக்கும் மந்திரி பிரதாப்போத்தன் மகன் தந்தையை நிர்ப்பந்தித்து வீரசமருக்கு பண உதவி செய்கிறான். அதற்கு கைமாறாக அரசியல் எதிரிகளை கொலை செய்ய வீரசமரை பயன்படுத்துகிறார் பிரதாப் போத்தன். அவர் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் சூழ்நிலை கைதியாகிறார்.
ஒரு கட்டத்தில் அரசியலில் அனுதாபம் பெற தனது மகனையே கொல்ல சொல்கிறார். அதை கேட்டு அதிர்கிறார் வீரசமர். போலீசும் சுற்றி வளைக்கிறது. பிறகு என்னவாகிறார் என்பது கிளைமாக்ஸ்...
படங்களுக்கு அரங்குகள் போடும் கலை இயக்குனர் வீரசமர் கதாநாயனாகி உள்ளார். தாடியும் அழுக்கு சட்டையுமாய் வறுமையில் வாழும் இளைஞனாக மாறியுள்ளார். ஆட்டோ கட்டணம் தராமல் ஏமாற்றும் பெண்களை வீட்டு சுவரில் ஓவியமாக வரைந்து அடித்து ஆத்திரத்தை தணிப்பது தமாஷ்.
இரு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கொல்லும்போது திடுக்கிட வைக்கிறார். காதலி அமலா வீட்டை ரவுடிகளிடம் இருந்து மீட்க அரசியல்வாதியை போட்டு தள்ளுவது பரபர... காதலி இன்னொருத்தனுக்கு மனைவியானதும் சோகத்தை உள்ளுக்குள் புதைத்து பரிதாபமாகிறார். நாயகி அமலா வந்து போகிறார்.
சுடுகாட்டில் வெட்டியானாக வாழ்கிறார் “பூ” ராமு. பிரதாப்போத்தன் அமைதியான வில்லத்தினத்தில் மிரட்டுகிறார். எம்.எஸ். பாஸ்கர் சிரிக்க வைக்கிறார்.
ஏழை இளைஞனின் வாழ்வியலை வேகமும் சோகமுமாய் படமாக்கியுள்ளார் இயக்குனர் நவி. சதீசு குமார். பெருமளவு சீன்கள் சுடுகாட்டுக்குள்ளேயே சுற்றுவது சலிப்பூட்டுகிறது. சாஜன் மாதவ் இசையில் பாடல்கள் இனிமை.