200 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை "தேவலீலை''
உலக சக்தி அனைத்தும் தனக்கே வரவேண்டும் என்று ஒருவன் தவமிருந்து பெறுகிறான். அவனுடைய தகாத செய்கையால் ஒரு சாபம் பெறுகிறான். பவுர்ணமி இரவுக்குள், குறிப்பிட்ட மூன்று பெண்களுடன் அவன் உறவு கொள்ள வேண்டும். அப்போதுதான் இருக்கிற சக்திகளை தக்கவைத்துக் கொள்ள முடியும். தவறினால் எல்லாம் பறிபோய்விடும் என்ற நிலை. இதற்காக, அவன் மூன்று பெண்களுடன் சங்கமித்தானா, இல்லையா?
 
இப்படி ஒரு மாறுபட்ட கதை கருவை வைத்து உருவாகி வரும் படம், `தேவலீலை.' 200 ஆண்டுகளுக்கு முன்பு நடக்கும் கதை இது. கேபிள் டி.வி, டிஷ், சாட்டிலைட், வாகனங்கள் ஆகியவை படத்தில் தெரியக்கூடாது என்பதால், மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளை படப்பிடிப்புக்காக தேர்வு செய்துள்ளனர்.
 
சிருங்கேரி, தர்மஸ்தலா, குதிரைமுக்கு, செஞ்சி, சித்தூர், பெங்களூர் ஆகிய இடங்களில், மலையும் காடும் சார்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
 
கதையின் நாயகனாக தனக்குமார் நடிக்கிறார். நாயகிகளாக ரூபாபட், கவிதா, ஸ்வேதா, புஷ்பா நாயக், சுனிதா ஆகிய ஐந்து அழகிகள் நடிக்கிறார்கள். கதை நாயகன் தீய சக்தியின் குணத்தை கொண்டவன். அவனை நாக கன்னி உருவமெடுத்து ஒரு பாம்பு பழிவாங்க துடிக்கிறது. கதையை முடித்து வைப்பது, அந்த பாம்புதான். நாயகன் கூடுவிட்டு கூடு பாய்வது, பாம்பு நாககன்னியாவது போன்ற காட்சிகள், `கிராபிக்ஸ்'சில் உருவாக்கப்படுகின்றன.
 
கதை-திரைக்கதையை துளசி எழுத, பாடல்கள்-வசனத்தை அன்பழகன் எழுத, ஒளிப்பதிவு-டைரக்ஷன்: கிருஷ்ணா-பிரபாகர். இசை: துர்கா. 3டி ஸ்டூடியோ காம் எண்டர்டென்மென்ட் கம்பெனி சார்பில் திவாகர், பாலாஜி ரெட்டி ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். படம், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.