சாதிக்க வைக்கும் சாதனை அம்மா
Chennai
திங்கட்கிழமை,
மார்ச் 01,
11:03 AM IST
0
கருத்துக்கள்
-`நான் சாதனையாளர் அல்ல.. ஆனால் என் பிள்ளைகளை சாதனையாளர் களாக்குவேன்..` என்று கூறும் தாய்மார்கள் அதிகம்.
- `நானும் சாதனையாளராகி, என் பிள்ளைகளையும் சாதனையாளர் களாக்குவேன்..` என்று கூறி தன்னையும் வளர்த்து, பிள்ளைகளையும் அதற்கு தக்கபடி உயர்த்தும் தாய்மார்கள் சிலர்தான்...
அதில் ஒருவர், மதுபாலா நாகர். 18 வயதில் இவருக்கும் அபிர்சந்த் நாகருக்கும் திருமணம் நடந்தது. அப்போது மதுபாலா பி.பி.எம். படித்துக் கொண்டிருந்தார். 19 வயதில் மகள் நெய்னா பிறக்கிறாள். அதன் பிறகு இவர் சி.ஏ. படித்து `சார்ட்டட் அக்கவுண்டன்ட்` ஆகி, `ஜெயின் சமுதாயத்தில் சி.ஏ. படித்த முதல் பெண்' என்ற பெருமையை பெறுகிறார். அதன் பிறகு `இன்பர்பேஷன் சிஸ்டம் ஆடிட்' பற்றி படித்து, ஆன்லைனில் ஆடிட் செய்வதில் புலமை பெற்றார். சார்ட்டட் அக்கவுண்ட்டன்ட்களுக்கான அமைப்பில் நடந்த தேர்தலில் தென்னிந்தியாவில் உள்ள ஐந்து மாநிலங்களில் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றியும் பெற்றார்.
மதுபாலா- அபிர்சந்த் நாகர் தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். நெய்னா, விகாஷ், அவினாஷ்.
தன்னை சாதனையாளராக ஆக்கிக்கொண்ட மதுபாலா, தன் குழந்தைகளையும் அதே வழியில் வளர்த்தது பெருமைக்குரிய விஷயம். நெய்னா, விகாஷ் இருவரையும் சி.ஏ.படிக்கவைத்தார்.
அகில இந்திய அளவில் சி.ஏ. படித்தவர்களில் சிறந்தவர்களை தேர்ந் தெடுக்கும் போட்டி கோவாவில் நடந்தது. அதில் இந்தியா முழுவதும் இருந்து 25 பேர் பங்குபெற்றனர். அதில் அக்காள், தம்பி இருவரும் கலந்துகொண்டனர். தேர்வுக் குழுவில் 6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். போட்டி முடிந்து, நடுவர்கள் முடிவை அறிவிக்கும்போது ஒரு சுவாரஸ்யம் நிகழ்ந்தது.
மூன்று பேர் விகாஷை தேர்வு செய்தனர். மீதமுள்ள மூவர் நெய்னாவை தேர்வு செய்தனர். தேர்வு சீட்டில் பதிவெண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கும். அதனால் அவர்கள் இருவரும் உடன் பிறந்தவர்கள் என்பதை அறியாத நடுவர்கள், இரு தரப்பாக நின்று கொண்டு தாங்கள் தேர்ந்தெடுத்தவரையே முதலாமவராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டிருந்தார்கள்.
இதனால் முடிவை அறிவிப்பதில் தாமதமாக, ஒரு கட்டத்தில் `இருவரையுமே முதல் பரிசுக்குரிய வர்களாக அறிவித்துவிடலாம்' என்று முடிவு செய்தனர். அறிவித்த பின்புதான் நடுவர்களுக்கு இருவரும் உடன் பிறந்தவர் கள் என்று தெரிந்திருக்கிறது. இவர்களோடு மேலும் 7 மாணவர்களை தேர்ந்தெடுத்து 9 பேரையும், `மாணவ பிரதிநிதிகளாக' பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்தார்கள்.
விகாஷின் சாதனையில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம். சி.ஏ. படித்தவர்கள் மற்றும் வேறு துறைகளில் நிபுணர்களாக இருப்பவர்கள் அமெரிக்காவில் நடத்தப் படும் `சி.ஐ.எஸ்.ஏ' என்ற படிப்பை ஆன்லைன் வாயிலாக ஒரு வருடம் படித்து தேறுவார்கள். விகாஷ் தனது அறிவுத்திறனை வெளிக்காட்டும் விதத்தில் சி.ஏ. படித்துக்கொண்டே 20 வயதிலேயே இந்த தேர்வை எழுதினார்.
அப்போது இந்தியாவிலே இளம் வயதில் அந்த தேர்வை எழுதி வென்றவர் ஆனார். இந்த ஆண்டில் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் கணிப்புப்படி ஆசியாவிலே இளம் சாதனையாளராக அவர் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பாராட்டையும் விகாஷ் பெற்றுள்ளார். அடுத்து ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
இவரது தம்பி அவினாஷ் என்ஜினீயரிங் படிக்கிறார். பல்வேறு துறைகளில் ஆர்வம் உள்ள இவர், தானும் சில சாதனைகளுக்காக தயார் ஆகிக் கொண்டிருக்கிறார்.
சாதனை படைக்கும் அளவிற்கு பிள்ளைகளை அறிவு, ஆற்றலோடு வளர்ப்பது எப்படி?- மதுபாலா நாகர் பதிலளிக்கிறார்...
"குழந்தைகளாக இருக்கும்போதே நல்ல பழக்கவழக் கங்களை கற்றுக்கொடுத்துவிட வேண்டும். குழந்தைகள் சிறுவர், சிறுமியர் ஆன பின்பும் பல தாய்மார்கள், அவர்களுக்கு உணவை ஊட்டிவிடுகிறார்கள். அது நல்ல பழக்கம் அல்ல. வீட்டில் ஊட்டி வளர்க்கப்படும் குழந்தைகள், பள்ளிக்கூடத்திற்கு சென்ற பின்பும் அதே ஞாபகத்தில் மதிய உணவை உண்ணாமல் வீடு திரும்பியதும், அம்மாவிடம் ஊட்டிவிடும்படி வற்புறுத்தும்.
குழந்தைகளிடம் `நீ அழகாக தோன்ற வேண்டுமானால் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். பால் பருகவேண்டும், பழங்கள் சாப்பிட வேண்டும் என்று கூறவேண்டும். என் பிள்ளைகள் இப்போதும் டீ, காபி பருகமாட்டார்கள். அது உடலுக்கு தேவையானது அல்ல என்ற கருத்தை சிறுவயதிலே அவர்கள் மனதில் பதித்துவிட்டேன்.
உடல் ஆரோக்கியம் பிள்ளைகளுக்கு இன்றியமையாதது. இவர்கள் பள்ளிக்கு போய்விட்டு வீடு திரும்பியதும் முதல் வேலையாக குளிக்க அனுப்பிவிடுவேன். குளித்து முடித்துவிட்டு வந்ததும், நன்றாக அழுக்கு போயிருக்கிறதா என்று அவர்கள் பாதங்களைப் பார்ப்பேன். முகத்தைப் பராமரிப்பதுபோல் பாதங்களையும் பராமரிக்க வேண்டும்.
குளித்துவிட்டு வந்ததும் விளையாடுவதற்காக அவர்களை வெளியே அனுப்பிவிடுவேன். எவ்வளவு ஹோம் ஒர்க் இருந்தாலும் அவர்கள் 4 முதல் 6 மணி வரை விளையாட வேண்டும். கோகோ, பேட்மிண்டன், கால்பந்து போன்றவைகளை அவர்கள் விளையாடுவார்கள். வியர்வை வழியும் அளவிற்கு வந்தபின்புதான் உணவு கொடுத்துவிட்டு, படிக்க உட்காரச் சொல்வேன்''
நல்ல பண்புகளை எப்படி கற்றுக் கொடுத்தீர்கள்?
"எங்கள் குடும்பங்களில் பாரம்பரியமாகவே காலையில் விழித்ததும் பெற்றோரின் கால்களைத் தொட்டு வணங்கி விட்டுத்தான் அன்றாட பணிகளில் ஈடுபடுவோம். அது போல் எங்கள் பிள்ளைகளும் தினமும் காலையில் எங்கள் கால்களைத் தொட்டு வணங்கி விடுவார்கள். பிள்ளைகளிடம் கர்வம் வராமல் இருக்க அவர்கள் இதைச் செய்யவேண்டும்.
வயதில் அதிகமானவர்களோ, பொறுப்பில் அதிகமானவர் களோ ஏதாவது வேலை சொன்னால் முதலில் அதை சரி என்று சொல்லிவிட வேண்டும். அதன் பிறகு நிதானமாக, `அந்த வேலையை இப்படியும் செய்யலாம். இப்படிச் செய்தால் சரியாக இருக்குமா என்று பாருங்கள்' என்பது போல் நம் தரப்பு விஷயங்களைச் சொல்ல வேண்டும். முதலில் எடுத்த எடுப்பிலே எதிர்மறையாக `அது சரிவராது. அது என்னால் முடியாது' என்பதுபோல் பேசி விடக்கூடாது''
எவ்வளவுதான் பக்குவமாக வளர்த்தாலும், இளைஞர் ஆகும்போது தேவையற்ற பழக்கங்கள் வந்து சேர்ந்திடுமே, அதை எப்படி தடுத்தீர்கள்?
"சிகரெட் பாக்கெட்டை வாங்கி வந்து அவர்கள் முன்னால் வைத்தேன். `சிகரெட்டை நீங்கள் பிடிக்கக்கூடாது' என்று நான் கூறவில்லை. அதை பயன்படுத்தினால் நுரையீரலில் என்ன பாதிப்பு ஏற்படும். புற்று நோய் வந்து எப்படி உயிரைப் பறிக்கும். ஆயுள் எப்படி குறையும் என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் விளக்கிவிட்டேன்.
அதை புரிந்துகொண்டு அது தங்களுக்கு தேவையில்லாத பழக்கம் என்று முடிவு செய்துவிட்டார்கள். அது போல் மதுவின் வாடை எப்படி இருக்கும், அதைப் பருகினால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதையும் விளக்கிவிட்டேன். அதனால் அப்படிப்பட்ட பழக்கங்கள் எதுவும் என் பிள்ளைகளிடம் உருவாகவில்லை''
மனைவி, அம்மா என்ற இரண்டு பொறுப்புகளையும் நிறைவேற்றிக்கொண்டு உங்களால் எப்படி படிக்கவும் முடிந்தது?
"அதற்கு முதல் காரணம் நாங்கள் வாழ்ந்த கூட்டுக் குடும்பம். திருமணமான புதிதில் எங்கள் கூட்டுக் குடும்பத்தில் இருபது பேர்கள் இருந்தார்கள். என் வேலைகளில் பலவற்றை அவர்கள் தங்களுக்குள் பிரித்து பார்த்துக் கொண்டார்கள். அதனால் என்னால் படிக்க முடிந்தது. இரண்டாவது காரணம், என் கணவர். என் வளர்ச்சிக்கும், குடும்ப வளர்ச்சிக்கும் தன்னால் முடிந்த அளவு அவர் ஒத்துழைப்பு கொடுக்கிறார். என்ன இருந்தாலும் ஐந்து வயதாகும் வரை குழந்தைகளை வளர்ப்பது சிரமம்தான். அவர்கள் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிய பின்புதான் நமக்கு தேவையான நேரம் கிடைக்கும்''
உங்களுக்கு 18 வயதில் திருமணம் நடந்திருக்கிறது. பெண்களுக்கு ஏற்ற திருமண வயது எது என்று கருதுகிறீர்கள்?
"பெண்களுக்கு 20 முதல் 24 வயதிற்குள் திருமணம் செய்து வைத்திட வேண்டும். 24 வயதுக்குப் பிறகு பெண்ணிடம் தனிப்பட்ட `மைன்ட் செட்டப்' உருவாகி விடும். அட்ஜஸ்ட் செய்யும் மனோபாவமும் குறைந்து விடும். ஆண்களுக்கு 24 முதல் 27 வயதுக்குள் திருமணம் செய்துவைத்துவிடுவது நல்லது''- என்று கூறும் மதுபாலா நாகர், தனது எதிர்கால லட்சியமாக `சார்ட்டட் அக்கவுண்டன்ட்' சங்கத்தின் தலைவராக வேண்டும் என்கிறார்.
0
கருத்துக்கள்