கல்லூரி வாழ்க்கையே கலகலப்பானது. இந்த பருவத்தில் மாணவிகள் சேர்ந்து கும்மாளமிடுவதும், வரம்பு மீறி சுதந்திரமாக திரிவதும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? என்பதை மையமாக வைத்து, `மகளிர் கல்லூரி' என்ற படம் தயாராகிறது. கோவையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் படம் இது.
பத்து மாணவிகளுக்கும், அவர்களை பந்தாட நினைக்கும் கண்ணுக்கு தெரியாத ஒரு எதிரிக்கும் இடையே நடக்கிற போராட்டத்தை ïகிக்க முடியாத திருப்பங்களுடனும், மர்ம முடிச்சுகளுடனும் சொல்லியிருக்கிறார், டைரக்டர் பாபுராஜ். கதாநாயகன் இல்லாத படம் இது.
இலங்கையை பிறப்பிடமாக கொண்டு, சென்னையில் மாடல் அழகியாக இருந்து வரும் துஷ்யந்தி, கதை நாயகியாக நடிக்கிறார். இதுவரை கவர்ச்சி நடனம் ஆடிவந்த சுஜா, இந்த படத்தில் தோழியை காப்பாற்ற துடிக்கும் அழுத்தமான வேடத்தில் நடிக்கிறார். ரம்யா நம்பீசன், சினிமா நடிகையாக கவுரவ வேடத்தில் தோன்றுகிறார். வாணிவிஸ்வநாத், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இவர்களுடன் முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் சுரேஷ்கோபி, மற்றும் சாய்குமார் நடிக்கிறார்கள்.
பி.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜாமணி இசையமைக்கிறார். பாபுராஜ் டைரக்டு செய்கிறார். எஸ்.ஆர்.ஜி.பிலிம்ஸ் சார்பில் விஷ்ணு ராஜகோபால் தயாரிக்கிறார்.