ஜக்குபாய்
நடிகர் :
சரத்குமார்.
நடிகை :
ஸ்ரேயா.
திரை வகை :
சண்டை

கடத்தல் கும்பல் வளையத்துக்குள் சிக்கிய மகளை மீட்க போராடும் போலீஸ் அதிகாரி கதை...
 
நேர்மையான அதிரடி போலீஸ் அதிகாரி சரத்குமார். சர்வதேச போதை கடத்தல் கும்பல் ஆஸ்திரேலியாவில் முகாமிட்டிருப்பதை அறிந்து பிடிக்க போகிறார். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீஷா அக்கூட்டத்தில் வேலை பார்ப்பதை கண்டுபிடிக்கிறார். ஸ்ரீஷாவை காதலிக்கிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது.
 
ஸ்ரீஷாவை வாழ்த்த வரும் கடத்தல் கும்பல் தலைவனை சரத்குமாரும், மாறுவேடத்தில் நிற்கும் போலீசும் துப்பாக்கி முனையில் வளைக்கிறது. அவன் ஸ்ரீஷா தந்தையை கொன்று தப்புகிறான். அதிர்ச்சியாகும் ஸ்ரீஷா சரத்குமாரை வெறுக்கிறார். தாலியை கழற்றி அவர் கையில் திணித்து விட்டு பிரிந்து போகிறார்.
 
தமிழகம் திரும்பும் சரத் இருபத்தியோரு வருடங்கள் வேறு திருமணம் செய்யாமல் ஸ்ரீஷா நினைவாகவே இருக்கிறார். ஒருநாள் ஸ்ரீஷா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. மீண்டும் ஆஸ்திரேலியா பறக்கிறார். அப்போது ஸ்ரீஷா மூலம் தனக்கு மகள் ஸ்ரேயா இருப்பது தெரிகிறது. ஸ்ரேயாவோ தந்தை மேல் வெறுப்பு காட்டி வளர்கிறார். தந்தை என்று சொல்லாமலேயே அவருக்கு பாதுகாவலராக இருக்கிறார்.
 
அப்போது ஸ்ரீஷா போதை கடத்தல் கும்பலால் கொல்லப்பட்ட விவரம் சரத்குமாருக்கு தெரிய வருகிறது. ஸ்ரேயாவையும் அந்த கும்பல் கடத்துகிறது. மகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பது கிளைமாக்ஸ்..
 
குடும்ப சென்டிமென்ட் ஆக்ஷன் களத்தில் விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்துகிறார் கே.எஸ்.ரவிக்குமார், மனைவியை பிரிந்த துக்கத்திலும், மகளிடம் காட்டும் பிரியத்திலும் வித்தியாசமான பரிணாமம் காட்டுகிறார். சரத்குமார் குழந்தை கடத்தல் கும்பலை மந்திரி விழாவில் இடியாய் தாக்கி அறிமுகமாகும் ஆரம்பமே அமர்க்களம்.
 
மகள் ஸ்ரேயாவை பாசத்தோடு நெருங்குவதும் அவரோ தாயை மோசம் செய்த தந்தை மாட்டினால் கொல்வேன் என்று ஆவேசமாக பேசுவதை பார்த்து தந்தை என்பதை சொல்ல முடியாமல் தவிப்பதும் இதயத்தை தட்டிப்போகும் சீன்கள். பரபரப்பான ஷாப்பிங் காம்ப்ளக்சில் கடத்தல் கும்பலை ஸ்ரேயாவிடம் பேசிக்கொண்டே அவருக்கு தெரியாமல் ஒவ்வொருத்தராய் அடித்து வீழ்த்தும் ஆக்ஷன் கைதட்டல் ரகம்.

ஹெலிகாப்டரில் நடக்கும் கிளைமாக்ஸ் பாசமும், ஆக்ஷனும் பீறிடும் சாகசம்...
மகளாக வரும் ஸ்ரேயா அழகு, குறும்பு வெகுளித்தனங்களில் ஸ்கோர்பண்ணுகிறார். தாயை இழந்த தவிப்பு. தந்தை மேல் வீசும் வெறுப்பு வில்லனை சபிக்கும் கோபம் என துறுதுறு வெனவருகிறார். வில்லன் பிடியில் சிக்கும்போது தந்தை யார் என்பதை அடையாளம் கண்டு பாசமிகுதியில் அழும்போது கண்கலங்க வைக்கிறார்.
 
கவுண்டமணி பழைய நக்கல் நையாண்டி தனத்தில் சிரிக்க வைக்கிறார். பிளாஸ்பேக் காட்சிகள் கோர்வையின்றி நகர்வது குழப்பமூட்டுகிறது. ஆஸ்திரேலியா சம்பவ சீன்களை இன்னும் விறுவிறுப்பாக தொகுத்து இருக்கலாம். ரப்பியன் இசையில் பாடல்கள் இனிமை. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு ஆஸ்திரேலிய அழகை அள்ளுகிறது.
மதிப்பீடு செய்க