சர்வதேச ஓவியப் பெண்!
Chennai
புதன்கிழமை,
ஜனவரி 06,
10:29 AM IST
0
கருத்துக்கள்
சிலருக்கு இயல்பாகவே அவர்களுடைய திறமைக்கான தனித்துவம் கிடைத்து விடும். சிலர் அதை தனது ஆத்மவலிமையின் காரணமாக மென்மேலும் கற்பனையை திரட்டி உலகின் முன்னணி பிரபலங்களாகி விடுவார்கள். அப்படித்தான் சுஜாதா பஜாஜ்! தனக்கு ஆண்டவன் கொடுத்த திறமையை தனது ஆளுமையின் காரணமாக அதை வர்ண மயமாக்கி, உலகம் முழுக்க பிரபலமாகியுள்ளார்.
பாரீசில் உள்ள `டாப் ஒன் ஆர்ட் கேலரி'யான பாட்ரிக் டிரிகானோ கேலரியில் சுஜாதாவின் கைவண்ணத்தில் உருவான ஓவியங்களின் நிறங்கள் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வேறு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. இதில் நமக்கு பெருமையான விஷயம்... சுஜாதா இந்தியாவைச் சேர்ந்தவர். சமீபத்தில் மும்பைக்கு வந்த அவரை சந்தித்த போது தனது ஓவியங்களைப் பற்றியும், வாழ்க்கை அனுபவங்கள் பற்றியும் விளக்கமாக பேசினார்.
``பணம் என்பது நமது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம். பணம் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையில் சுதந்திரத்தையும், தன்னம்பிக்கையையும் தருகிறது. ஆனாலும் பணத்தால் நம்முடைய சுதந்திரத்தையும், கற்பனையையும் இழந்து விடக் கூடாது என்பதே என் கருத்து. உலகின் மிகச் சிறந்த ஓவியர்களான பிகாசோ, ஹண்டர்ட்வெசர் ஆகியோரின் ஓவியங்கள் இடம் பெற்ற இடத்தில் என்னுடைய ஓவியமும் இடம் பெற்றுள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? இப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று நான் நினைத்துப் பார்த்ததே இல்லை. பாரீசில் உள்ள மிகச் சிறந்த கேலரியில் என்னுடைய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளதை என்னவென்று சொல்வது?'' என்று ஆச்சரியப்படும் சுஜாதா பிறந்து வளர்ந்தது எல்லாம் ஜெய்ப்பூர் மற்றும் புனேயில்.
எப்போதும் இந்திய ஆடைகளையே விரும்பி அணிகிறார். இவருக்கு இந்திய ஆடைகளின் வடிவமும், உருவாக்கமும் மிகவும் பிடிக்குமாம்.
தொடர்ந்து பேசுகையில், ``என்னுடைய அம்மா அடிக்கடி ஒரு விஷயத்தை அழகாக சொல்லுவார், `நீ செல்லும் பாதை மிகச் சரியாக இருந்தால், உலகில் எந்த மூலையில் இருந்தாலும் நன்றாக வாழலாம்' என்பார். இந்தியா என்னுடைய தாய்வீடு. பாரீஸ் என்பது எனக்கு பால்கனி போன்றது. கொஞ்ச நாள் உலாவி விட்டு இங்கே வந்து விடுவேன். அங்கே சென்றாலும், தாய்வீடுதான் எனக்கு பிடிக்கும். ஆனால் இரண்டையும் ஒப்பிட முடியாது'' என்று இந்தியாவின் மீதான பிரியத்தை வெளிப்படுத்துகிறார் சுஜாதா.
``எனக்கு சின்ன வயதிலிருந்தே படம் வரைவதில் அலாதி பிரியம். சில நேரங்களில் தரையில் நீண்ட நேரம் உட்கார்ந்து வரைந்து கொண்டே இருப்பேன். சில உருவங்களை சரியாக வரையாவிட்டால் மனது சோகமாகி விடும். அம்மாதான் எனக்கு ஆறுதல் கூறி தேற்றுவார். என்னுள் ஓவியத் திறமை இருப்பதை கண்டுபிடித்ததும் அம்மாதான். அப்புறம் ஒவ்வொரு நாளும் ஏதாவது வித்தியாசமாக வரைந்து கொண்டே இருப்பேன். சாப்பிடும் நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் சுவர்களில், பேப்பரில் என வரைந்து தள்ளிக் கொண்டே இருந்ததைப் பார்த்து பெற்றோர் எனக்கு மேலும் ஊக்கமளித்தனர்.
பின்னர், புனேவில் உள்ள ஓவியக் கல்லூரி பேராசிரியர் கெல்கரை சந்தித்தேன். அவர் என்னிடம் மெகா சைசில் இருக்கும் ஆயிரம் பேப்பர்கள் மற்றும் ஆறு பென்சில்களை கொடுத்து, செங்குத்தாகவும், இடை மட்டமாகவும் கோடு வரையும்படி கூறினார். அவர் கூறியதை செய்து முடிக்க எனக்கு மூன்று மாதங்கள் ஆனது. அந்த வேலை எனது மனதில் சுதந்திரமான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது'' என்கிறார்.
தனது ஓவியங்களையும், தாம் பெற்ற பரிசுகள், விருதுகளையும் காண்பித்து சந்தோஷப்படும் சுஜாதாவின் முதல் ஓவியக் கண்காட்சி நடந்தது புனேயில். அப்போது இவருக்கு வயது 20. பின்னர் தமது ஆசிரியர்களின் கட்டளைப்படி நான்கு வருடங்கள் சின்னஞ்சிறு கிராமங்களுக்கு சென்று பழங்குடி இன மக்களின் ஓவியங்களை ஆராய்ச்சி செய்துள்ளார்.
இது குறித்து கூறும்போது, ``இந்தியாவில் யாருமே செல்லமுடியாத அடிப்படை வசதியற்ற கிராமங்களுக்கெல்லாம் சென்றுள்ளேன். மத்திய பிரதேசத்தில் உள்ள மதியாஸ், முரியாஸ், ராஜஸ்தானில் பில்ஸ், மகாராஷ்டிராவில் உள்ள வார்லிஸ் மற்றும் ஒரிசாவில் உள்ள சவுராஸ் ஆகிய இடங்களில் உள்ள பழங்குடியினரின் திறமைகள் அபாரமானவை. அவர்கள் சுவர்களிலும், வீட்டுக் கதவுகளிலும், பாறைகளிலும் எவ்வித உபகரணங்களும் இன்றி வரைந்த ஓவியங்களைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை! எப்படி வரைந்தார்கள் என்று அதிசயமாகப் பார்த்தேன்.
சில கிராமங்களில் வரைந்த ஓவியங்களை தெளிவாக பார்க்க முடியாத சூழல். அந்தளவுக்கு மூலை, முடுக்குகளில், ஒளி வெளிச்சம் இல்லாத குகைகளில் வரைந்துள்ளனர். நான் முதன் முதலாக ஒரு கிராமத்திற்கு சென்றபோது, ரோட்டிலிருந்து பல மணி நேரம் நடந்தே சென்றேன். பழங்குடியினரின் ஓவியங்கள், அவர்களின் வாழ்க்கையில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் வெளிக் காட்டுவதாக அமைந்திருந்தது. பிறப்பு, வளர்ப்பு, இறப்பு, சுகமின்மை, திருமணம், சடங்கு ஆகியவற்றை
பிரதிபலித்தன'' ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார் சுஜாதா.
``பிரபல ஓவியர் எஸ்.எச்.ரசா, என்னை பாரீசுக்கு வருமாறு அழைத்தார். நானும் அவரும் பல மணி நேரம் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் குறித்து பேசுவோம். எனது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக ரசா விளங்கினார். எனக்கு இந்தியா, பிரான்ஸ் மற்றும் நார்வே ஆகிய மூன்று நாடுகளுக்கும் சென்று வந்தால் போதும்... என்னுடைய மனது புத்துணர்ச்சியாகிவிடும். எனது மகள் ஹலீனா பிறந்த பின்னர், நான் நார்வேயில் வசித்து வருகிறேன். நானே சமைத்து, நானே சாப்பிடுவது என்பது எனக்கு சமையலில் பல அனுபவங்களை தருகிறது.
ஒவ்வொரு உணவையும், சமையல் புத்தகத்தை அருகில் வைத்துக் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் சமைப்பது ஒரு நல்ல அனுபவம்தான். முதன்முதலில் நார்வேயில், எனது கண்காட்சியை நடத்தியபோது, நிறைய ஓவியங்கள் விற்பனையானது. பின்னர் பாரீசுக்கு குடும்பத்துடன் சென்று விட்டேன். அங்கே எனது ஓவியம் மற்றும் அனுபவங்கள் குறித்து ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் பிரெஞ்சு எழுத்தாளர் ஜீன்க்ளாட் கேரீர்.
இந்த புத்தகத்தில் ஓவியங்கள், பெயின்டிங் மற்றும் உருவாக்கம் குறித்த ஆத்மார்த்தமான கருத்துக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அடுத்து, ஓவியங்கள் மற்றும் பிற கலைகள் குறித்த புத்தகம் ஒன்றில் எனது படம் மற்றும் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவையெல்லாம் எனது வாழ்க்கையின் முக்கியமான தருணங்கள்!'' என்று ஓவியம் போல் அமைதியாகப் புன்னகைக்கிறார் சுஜாதா.
0
கருத்துக்கள்