Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
ஆயிரம் மேடை கண்ட அழகு மங்கை...
குச்சுப்புடி நடனத்தின் வரலாற்றை தெரிந்துகொள்ள விரும்பினால், சிறிது நேரம் ஜெயபிரியா விக்ரமனிடம் பேசிக்கொண்டிருந்தால் போதும்.
 
"விஜயவாடாவில் இருந்து 35 கி.மீட்டர் தூரத்தில் குச்சுப்புடி என்ற ஊர் இருக்கிறது. அங்கு உருவான பழமையான நாட்டியக்கலை அந்த ஊர் பெயராலே குச்சுப்புடி என்று அழைக்கப் படுகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்புவரை ஆண் கள் மட்டுமே இந்த நடனத்தை ஆடினார்கள். வேகம், நளினம், பாவம், அழகு நிறைந்த இந்த நடனத்தை பெண்களும் ஆடினால்தான் முழு சிறப்பு கிடைக்கும் என்பதால், பிற்காலத்தில் பெண் களுக்கும் கற்றுகொடுக்கத் தொடங்கினார்கள்.
 
உலகப் புகழ் பெற்ற இந்த கலைக்கு உன்னதமான குருவாக இருக்கும் வேம்பட்டி சின்ன சத்யத்திற்கு 81 வயது. அவரிடம்தான் வைஜெயந்தி மாலா, ஹேமமாலினி, லட்சுமி விஸ்வநாத், விஜயசாந்தி, ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் கற்றுக் கொண்டார்கள். நானும் கற்றுக்கொண்டேன்...''-என்று உற்சாகமாக அதன் சரித்திரத்தை சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஜெயபிரியா விடம் கொஞ்சம் கவலையும் எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது.
 
கவலைக்கான காரணத்தையும் அவரே சொல்கிறார்...
 
"சிறப்பு மிகுந்த இந்த கலை இப்போது அழியும் நிலையில் இருக்கிறது. அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் நாம் எல்லோரும் இருக்கிறோம். அதற்காக ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கிறது''-என்கிறார்.
 
குச்சுப்புடி என்ற ஊரில் இருந்து சற்று தொலைவில் இருக்கிறது, மிலிட்டரி மாதவரம். இந்த குக்கிராமத்தில் 200 வீடுகள் உண்டு. அங்கிருக்கும் ஆண்கள் அனைவரும் ராணுவத்தில் பணிபுரிவதால் அந்த ஊரின் பெயரோடு `மிலிட்டரி'யும் இணைந்து கொண்டது. அந்த கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் சீதா ராமையாராவ்- நாகரத்தினம் தம்பதிகளுக்கு ஒன்பது பெண். ஒரு ஆண். மொத்தம் பத்து குழந்தைகள். அதில் ஐந்தாவது பிறந்தவர் இந்த ஜெயபிரியா.
 
"என் அம்மா முற்போக்குவாதி. நாங்கள் அனைவரும் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக நான் ஆறு மாத கைக் குழந்தையாக இருந்தபோதே குடும்பத்தோடு சென்னைக்கு வந்து விட்டார்கள். எங்கள் வீட்டில் எல்லோரும் எல்லா கலைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அம்மா விரும்பினார். அக்கா மாஸ்டரிடம் குச்சுப்புடி கற்றுக்கொள்ளச் சென்றார். அக்காவை அழைத்து வருவதற்காக கைக் குழந்தையான என்னை இடுப்பில் தூக்கிவைத்துக் கொண்டு அம்மா செல்வார்களாம். பயிற்சிக் கூடத்தின் உள்ளே தாள இசைக் கேட்டதும் நான் அம்மாவின் இடுப்பில் இருந்து இறங்கி, தாளத்திற்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிடுவேனாம். இப்படி நடனத்தில் எனக்கு இருந்த ஆர்வத்தை தெரிந்துகொண்டு என்னையும் நாட்டியத்தில் சேர்த்துவிட்டார்கள்.''
 
சிறு வயதிலே நாட்டியத்தை கற்கத் தொடங்கிய ஜெய பிரியா, இளம் வயதிலே புகழ் பெற்ற குச்சுப்புடி கலைஞர் ஆகிவிட்டார். 15 வயதினிலே ரஷியாவில் நடந்த இந்திய கலைவிழாவில் கலந்துகொண்டார். நாட்டிய நிகழ்ச்சிக்காக உலகில் பெரும்பாலான நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். இவர் ஆடிய மேடைகள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாட்டியம் மட்டுமின்றி வீணை, சிதார், தம்புரா, தஞ்சாவூர் ஓவியம் போன்றவைகளையும் கற்றிருக்கிறார்.
 
நாட்டிய நங்கையாக ஜொலித்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கும்- பிரபல இயக்குனர் விக்ரமனுக்கும் திருமணம் நடந்தது.
 
"திருமணம் என் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை. அவர் பிரபலமான டைரக்டராக இருந்ததால் நானும் நடனத்தில் பிசியாக இருக்க விரும்பவில்லை. தொடர்ந்து ஆடிக் கொண்டே இருந்த நான் குடும்ப பொறுப்பை மட்டும் கவனித்தது, எனக்கு நல்ல ஓய்வாகவும் அமைந்தது. அடுத்து தாய்மை அடைந்தேன். மகன் கனிஷ்கா பிறந்தான். தாய்மைப் பொறுப்பை முழுமையாக நிறை வேற்றினேன். அடுத்து மகள் பூஜா பிரதியுஷா பிறந்தாள். அப்போதெல்லாம் நான் முழு குடும்பத்தலைவியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நாட்டிய பயிற்சி செய்தேன்...''
 
மீண்டும் நடனத்தில் ஈடுபாடு காட்ட தூண்டுதலாக இருந்தது எது?
 
"அம்மா வைஜெயந்தி மாலாவின் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றிற்கு நானும் என் மகனும் சென்றிருந்தோம். நிகழ்ச் சியை பார்த்து விட்டு என் மகன், `இவங்க எவ்வளவு அற்புதமாக ஆடுறாங்க. நீங்கதான் ஆடவே மாட்டேங் கிறீங்க. நீங்க மேடையில் ஆடுவதை நானும் பார்க்கணும்' என்றான். அதோடு வைஜெயந்திமாலா அம்மாவும், `என் மகளாகக்கூடிய எல்லா தகுதியும் உனக்கு இருக்கிறது. ஆனால் நடனத்தில் மட்டும் இடைவெளி விட்டுவிட்டாய். மீண்டும் முழு மூச்சாக நடனத்தில் இணைந்து, இந்த அம்மாவின் ஆசையை நிறைவேற்று' என்றார்கள். அவர்கள் காட்டிய உருக்கம் என்னை மீண்டும் மேடைகளில் ஆடவைத்தது..''
 
வைஜெயந்தி மாலாவைப் பற்றி சொல்லும் போதெல்லாம் அம்மா அம்மா என்று உருகுகிறீர்களே..?
 
"என் அம்மா நாகரத்தினத்தின் மரணம் என்னை வெகுவாக பாதித்திருந்த நேரத்தில், எனக்கு வைஜெயந்திமாலா அம்மாவானார். `நீ என்னை அம்மா என்று கூப்பிடு. என் வயிற்றில் பிறக்காவிட்டாலும், என் மனதில் பிறந்த மகள் நீ..' என்று பத்து வருடங்களுக்கு முன்னால் சொன்னார். அன்றிலிருந்து நாங்கள் அம்மாவும், மகளுமாய் ஆகிவிட்டோம். நாங்கள் அடிக்கடி சந்திப்போம். அவர் வீட்டு ஊஞ்சலில் நாங்கள் இருவரும் அம்மா, மகளாக அமர்ந்து உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களைப் பற்றியும் பேசுவோம். அவர் டி.கே.பட்டம்மாளிடம் பாட்டு கற்றவர். நன்றாக பாடுவார். நான் அவருக்காக ஆடுவேன். 72 வயதிலும் அவர் என்னை விட அழகான அம்மா. அவரிடமிருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டிருக்கிறேன்...''
 
பெற்ற அம்மாவின் அன்பிற்கும், இந்த அம்மாவின் அன்பிற்கும் என்ன வித்தியாசம்?
 
"பெற்ற அம்மாவிடம் இருந்து கிடைத்தது கட்டாயமான அன்பு. இவரிடம் இருந்து கிடைத்துக் கொண்டிருப்பது எந்த கட்டுப்பாடும் இல்லாத அன்பு. அந்த அம்மா எல்லா கலைகளையும் கற்றுக்கொள்ளச் செய்தார். இந்த அம்மா கற்றதை, கலைக்காக அர்ப்பணிக்க ஊக்குவிக்கிறார்''
 
பல வருடங்கள் பயின்று நாட்டியத்தில் ஜொலிப் பதைவிட, சில வருடங்கள் கம்ப்ïட்டர் போன்ற தொழில் நுட்பங்களை கற்றால் நிறைய சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பெண்களிடம் வேரூன்றி வருகிறதே?
 
"முன்பெல்லாம் பெற்றோர்கள் மகள்களை நடனம் கற்றுக்கொள்ள வற்புறுத்துவார்கள். காரணம் அதற்கென்று தனி மரியாதை, ஒழுக்கம் போன்றவை இருக்கிறது. மனப் பக்குவமும் நிறைய கிடைக்கும். இப்போது நவீன தொழில்நுட்பத்தை கற்கும் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள். பழக்கவழக்க முரண்பாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். மனதை ஒரு நிலைப் படுத்தி சாதிக்க முடியாமலும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மன பக்குவம் இல்லாமலும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நடனம் கற்கிறவர்கள் அந்தக் கலை மூலம் நிறைய சம்பாதிக்க முடியாது என்றாலும், தனிப்பட்ட முறையில் தங்களுக்குள் நிறைய ஆற்றலையும், பக்குவத்தையும் வளர்த்துக்கொள்கிறார்கள். கவுரவத்தையும் தேடிக்கொள்கிறார்கள். அது காலம் முழுக்க அவர்களுக்கு கைகொடுக்கும்..''
 
சமீபத்தில் நீங்கள் நடத்திக்காட்டிய பாராட்டிற்குரிய நிகழ்ச்சி எது?
 
"ஒரே மேடையில் இரண்டு நாட்டிய நாடகங்களை நடத்தினேன். சங்கமித்திரை (மாமன்னர் அசோகரின் மகள்), சண்டாலிகா (தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்) ஆகிய இருவரும் பல்வேறு வாழ்க்கை போராட்டங்களுக்குப் பிறகு புத்த மதத்தை தழுவுவார்கள். நானே இருவராகவும் வெவ்வேறு கோணங்களிலும் தோன்றினேன். மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக அந்த நிகழ்ச்சி நடந்தது. மேடை அமைப்பு, மேக்-அப், உடை, நாட்டிய அமைப்பு போன்ற அனைத்தையும் நானே கவனித்தேன். நன்றாக இருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள்''
 
குச்சுப்புடி கலை அழிவதாக சொல்கிறீர்களே, காரணம் என்ன?
 
"பாரம்பரிய கலைகள் அனைத்திற்கும் இப்போது தொய்வு ஏற்பட்டிருக்கிறது. `லைட் மிïசிக்' பாடும் பாடகிகள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் கர்நாடக இசையை கற்பவர்கள் குறைந்து கொண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் படித்தால் டாக்டர், என்ஜினீயர் போன்ற பட்டங்களை பெற்றுவிடலாம். ஆனால் கடுமையான பயிற்சிகளை தொடர்ச்சியாக பல வருடங்கள் பெற்றால் மட்டுமே குச்சுப்புடி நடனத்தில் சாதிக்க முடியும். ஆனாலும் இதில் நிறைய சம்பாதிக்க முடியாது. அதனால் எளிதாக பணம் சம்பாதிக்கும் விஷயங்களில் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த போக்கால் கலை அழிகிறது.
 
கணவர் கொடுக்கும் ஊக்கம், குடும்பச் சூழல், கடவுள் கிருபை போன்றவைகள் கிடைப் பதால்தான் என்னைப் போன்றவர்களால் தொடர்ந்து இந்த கலையில் ஈடுபட முடிகிறது. எனது குரு பக்தியை காட்டுவதற்காக, வேம்பட்டி சின்னசத்யத்தின் 80-வது பிறந்த நாளில் அவருடைய சிறப்புகளை விளக்கும் டாக்குமென்டரி ஒன்றை தயாரித்து வெளியிட்டேன். உலகப்புகழ் பெற்ற கலைஞர்கள் அதில் மாஸ்டரின் சிறப்புகளை வெளிப்படுத்தினார்கள். அதைப் பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்த அவர், `எனக்குப் பின்னால் நீதான் இந்த கலையை காப்பாற்ற வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். நாட்டியக் கலைஞர்கள் எல்லாரும் போராடுகிறார்கள். நானும் போராட்டம், பொறாமைகளுக்கு மத்தியில் இந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்''
 
கலை வளர்ச்சி மற்றும் சமூக சேவைக்காக ஜெயபிரியா `நாகாபரணா ஆர்ட்ஸ் பவுண்ட்டேஷன்' என்ற அமைப்பை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார். தேசிய அளவில் கலைச் சேவையாற்றி வருகிறவர்களுக்கு இதன் சார்பில் விருது வழங்குகிறார். வைகுண்ட ஏகாதசி அன்று திருப்பதி மலையில் `சீனிவாசா திருமண வைபோகம்' என்ற புராண நாட்டிய நாடகத்தையும் ஜெய பிரியா நடத்த இருக்கிறார்.