Logo
சென்னை 19-04-2014 (சனிக்கிழமை)
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் சிவாஜி கணேசன் நடித்த "திரும்பிப்பார்"
"மந்திரிகுமாரி"யைத் தொடர்ந்து, கருணாநிதிக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத்தொடங்கின. அதனால் அவர் சென்னையில் குடியேறினார். அவரை மீண்டும் சேலத்துக்கு வரச்செய்து, "தேவகி" என்ற படத்துக்கு கதை_வசனம் எழுதச்சொன்னார், டி.ஆர்.சுந் தரம். அதன்படி கதை_வசனம் எழுதிக்கொடுத்தார், கருணாநிதி.
 
"தேவகி"யில் வி.என்.ஜானகியும், எம்.என்.கண்ணப்பாவும் ஜோடியாக நடித்தனர். மாதுரி தேவியும், எஸ்.பாலசந்தரும் மற்றொரு ஜோடி. படம் நன்றாகவே ஓடியது. மந்திரிகுமாரிக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் நடிப்பும், அவருடைய கத்திச் சண்டைகளும் டி.ஆர்.சுந்தரத்துக்குப் பிடித்துப்போயின. அவரை வைத்து, வீரதீரச் செயல்கள் நிறைந்த ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்தார். "கேலண்ட் பிளேட்" என்ற ஆங்கிலப்படத்தின் கதையைத் தழுவி, ஒரு படத்தைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
 
முதலில் "வீரவாள்" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் பெயர் "சர்வாதிகாரி" என்று மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆருக்கு ஜோடி அஞ்சலிதேவி. மற்றும் வி.நாகையா, எம்.என்.நம்பியார் ஆகியோரும் நடித்தனர்.
 
இந்தப் படத்துக்கு வசனம் எழுதும்படி, கருணாநிதிக்கு சுந்தரம் அழைப்பு விடுத்தார். அப்போது, கருணாநிதிக்கு அரசியல் தொடர்பான வேலைகள் அதிகமாக இருந்தன. எனவே, அவர், ஏ.வி.பி.ஆசைத்தம்பியை சிபாரிசு செய்தார். அதற்கு சுந்தரம் சம்மதிக்கவே, ஆசைத்தம்பி சேலம் சென்று வசனம் எழுதினார்.
 
"சர்வாதிகாரி" படத்தில் போர்க்களக் காட்சிகள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டன. ஆங்கிலப்படத்தில் நடிகர்கள் எந்த மாதிரி உடை அணிந்திருந்தார்களோ, அதே மாதிரி உடைகள் தயாரித்துக் கொடுக்கப்பட்டன. படம் வெற்றி பெற்றது.
 
இப்படத்துக்கு, "வீரவாள்" என்ற பெயருக்கு பதிலாக, "சர்வாதிகாரி" என்ற பெயர் சூட்டப்பட்டதின் பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது, காலை 8 மணிக்கு வரவேண்டிய இரண்டு சாரட்டு வண்டிகள் குறித்த நேரத்தில் வரவில்லை. அப்போது, புரொடக்ஷன் மானேஜராக இருந்தவர் எம்.ஏ.வேணு. (பிற்காலத்தில் "சம்பூர்ண ராமாயணம்" படத்தைத் தயாரித்தவர்)
 
அவர் சாரட்டு வண்டிகளை வேறு இடத்துக்கு அனுப்பி விட்டார். இதை அறிந்த சுந்தரம் கோபம் அடைந்து அவரை அழைத்து `டோஸ்' விட்டார். "என்னா மேன்! நான் ஒரு இடத்துக்கு வண்டியை அனுப்பச் சொன்னால், நீ வேறு இடத்துக்கு அனுப்புகிறாய்? நீ என்ன பெரிய சர்வாதிகாரியா?" என்று சீறினார். அருகில் நின்ற எம்.ஜி.ஆர். இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.
 
சற்று நேரம் திட்டிய பிறகு சுந்தரம் அமைதியானார். அதன்பின் அவரிடம் எம்.ஜி.ஆர். சென்றார்.
 
"என்ன ராமச்சந்திரன்? ஏதாவது வேணுமா?" என்று சுந்தரம் கேட்டார்.
 
"ஒன்றும் வேண்டாம். ஒரு சிறு யோசனை."
 
"என்ன யோசனை? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லலாம்!"
 
"நம் படத்திற்கு வீரவாள் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள்."
 
"ஆமாம். அதுதானே சரியான மொழிபெயர்ப்பு!"
 
"ஆனால், அதைவிட சர்வாதிகாரி என்று பெயர் வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்" என்றார், எம்.ஜி.ஆர்.
 
சுந்தரம் கொஞ்சம் யோசித்தார். பிறகு பெரிதாக சிரித்தார்.
 
"நான் வேணுவை திட்டும்போது சர்வாதிகாரி என்று சொன்னேன். இந்தப் படத்துக்கு சர்வாதிகாரி என்பது பொருத்தமான பெயர்!" என்று கூறிவிட்டு, நல்ல யோசனை தெரிவித்ததற்காக எம்.ஜி.ஆரைப் பாராட்டினார்.
 
"வீரவாள்" என்ற பெயர் உடனடியாக "சர்வாதிகாரி" என்று மாற்றப்பட்டது.
 
1953_ம் ஆண்டு, "சுஜாதா" என்ற பெயரில் சிங்களப்படம் ஒன்றை டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார். இலங்கையைச் சேர்ந்த குணரத்னா என்பவருடன் கூட்டாக சேர்ந்து தயாரித்த படம் இது.

படப்பிடிப்பின் பெரும் பகுதி இலங்கையில் நடந்தது. சிங்கள நடிகர் _ நடிகைகள் நடித்தனர். படம் பிரமாதமாக ஓடியது. அதைத் தொடர்ந்து, அடுத்த 7 ஆண்டுகளில் 7 சிங்களப் படங்களை கூட்டாக எடுத்தார், சுந்தரம்.
 
இடையிடையே தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்களும் தயாரிக்கப்பட்டன. இதற்கிடையே, கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் அறிமுகமான "பராசக்தி" படம் வெளிவந்து வரலாறு படைத்தது.
 
கருணாநிதியையும், சிவாஜி கணேசனையும் வைத்து மாடர்ன் தியேட்டர்ஸ் சார்பில் படம் தயாரிக்க சுந்தரம் விரும்பினார். கருணாநிதி அரசியலிலும், திரைப்படத்துறையிலும் பிசியாக இருந்தபோதிலும், சுந்தரத்தின் அழைப்பை ஏற்று, "திரும்பிப்பார்" கதையை உருவாக்கி, வசனத்தையும் எழுதிக்கொடுத்தார்.
 
இந்தப்படத்தில் சிவாஜிக்கு "ஆன்டி ஹீரோ" வேடம். பராசக்தியில் சிவாஜியின் ஜோடியாக நடித்த பண்டரிபாய், இதில் அவருக்கு அக்காவாக நடித்தார். மற்றும் நரசிம்ம பாரதி, கிருஷ்ணகுமாரி, கிரிஜா, தங்கவேலு ஆகியோரும் நடித்தனர். பாரதிதாசன் பாடல்கள் இடம் பெற்ற இப்படத்துக்கு, கண்ணதாசனும் பாடல்கள் எழுதினார். டி.ஆர்.சுந்தரம் டைரக்ட் செய்தார். இசை: ஜி.ராமநாதன்.
 
இந்தப் படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொருவிதமான உடையில் சிவாஜி தோன்றினார். 10_7_1953_ல் "திரும்பிப்பார்" வெளியாகியது. "பராசக்தி" போல இது மெகாஹிட் திரைப்படம் அல்ல என்றாலும், வெற்றிப்படமே.
மதிப்பீடு செய்க