Logo
சென்னை 20-04-2014 (ஞாயிற்றுக்கிழமை)
  • சோனியா தொகுதியில் ராகுலின் கூட்டம் திடீர் ரத்து
  • மும்பை: இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று நடக்கிறது
  • தமிழகத்தில் பூத் சிலிப் விநியோகம் இன்று வரை நீட்டிப்பு
  • காஞ்சிபுரம்: நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி ஒருவர் பலி
  • தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவம் இன்று தமிழகம் வருகை
ஏவி.எம். பொன் விழா ஆண்டு "மின்சார கனவு" மகத்தான சாதனை
ஏவி.எம். ஸ்டூடியோவின் பொன் விழாவையொட்டி தயாரிக்கப்பட்ட "மின்சார கனவு" 4 தேசிய விருதுகளைப் பெற்றது. காரைக்குடியில் தொடங்கப்பட்ட ஏவி.எம். ஸ்டூடியோ தயாரித்த முதல் படம் "நாம் இருவர்". அப்படம் 1947_ல் வெளிவந்தது.
 
முதல் படம் வெளிவந்து 50 ஆண்டுகள் ஆன பொன் விழாவையொட்டி, சிறந்த முறையில் ஒரு படத்தைத் தயாரிக்க ஏவி.எம்.சரவணன் முடிவு செய்தார். இளைஞர்களைக் கவரவேண்டும் என்ற நோக்கத்துடன், "மின்சார கனவு" கதை உருவாக்கப்பட்டது.
 
இந்தப் படத்தின் இரண்டு கதாநாயகர்களாக அரவிந்தசாமியும், பிரபுதேவாவும் நடித்தனர். கதாநாயகி _ பிரபல இந்தி நடிகை கஜோல். புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன், டைரக்ஷன் பொறுப்பை ஏற்றார். அவருடைய உதவியாளர் ரவி கே.சந்திரன், ஒளிப்பதிவாளராக உயர்ந்தார்.
 
வசனத்தை வி.சி.குகநாதன் எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். ஏவி.எம். படத்துக்கு அவர் இசை அமைப்பது அதுவே முதல் தடவை. ஏவி.எம். சரவணனின் மகன் எம்.எஸ்.குகன், இந்தப் படத்தின் தயாரிப்பில் தீவிர பங்கெடுத்துக் கொண்டார்.
 
"மின்சாரக் கனவு" 1997 பொங்கல் தினத்தன்று வெளியாகியது. 218 நாட்கள் ஓடி மகத்தான வெற்றி பெற்றது. 1997_ம் ஆண்டுக்கான மத்திய அரசின் 4 தேசிய விருதுகளை, "மின்சார கனவு" அள்ளி வந்தது.
 
விருது பெற்றவர்கள்:-
 
1. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (சிறந்த பின்னணி பாடகர்)
 
2. சித்ரா (சிறந்த பின்னணி பாடகி)
 
3. ஏ.ஆர்.ரகுமான் (சிறந்த இசை அமைப்பாளர்)
 
4. பிரபுதேவா (சிறந்த நடன டைரக்டர்)
 

மின்சாரக்கனவு, இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் "டப்" செய்யப்பட்டு சக்கை போடு போட்டது.
21_ம் நூற்றாண்டு பிறந்தது. டைரக்ஷன், நடிப்பு, இசை முதலான அனைத்து துறைகளிலும் இளைஞர்கள் புகுந்து முத்திரை பதித்தனர். நடிப்பில் விக்ரம் விஸ்வரூபம் எடுத்தார்.
 
விக்ரமை வைத்து படம் எடுக்க சரவணன் தீர்மானித்தார். "சேது" படத்தில் மன நோயாளியாக _ மாறுபட்ட வேடத்தில் விக்ரம் பிரமாதமாக நடித்து, திரை உலகில் தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டிருந்தார். அவரை மாறுபட்ட வேடத்தில் நடிக்க வைக்க ஒரு கதையை உருவாக்கினார்கள்.
 
படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தார்கள். பலரும் பலவிதமான யோசனைகளைத் தெரிவிக்க, கடைசியில் "ஜெமினி" என்ற பெயர் சரவணனுக்குப் பிடித்துப் போயிற்று.
 
ஆயினும், ஜெமினி என்பது இன்னொரு புகழ் பெற்ற திரைப்பட நிறுவனத்தின் பெயராதலால், அந்தப் பெயரை படத்துக்கு வைக்கலாமா என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி "ஜெமினி" எஸ்.எஸ்.வாசனின் மகனும், ஆனந்த விகடன் ஆசிரியருமான எஸ்.பாலசுப்பிரமணியனுக்கு சரவணன் கடிதம் எழுதினார். பாலசுப்பிரமணியன், ஜெமினி என்று பெயர் சூட்ட முழு சம்மதம் தெரிவித்ததுடன், படத்தின் வெற்றிக்கு தன் ஆசியையும் வழங்கினார்.
 
"ஜெமினி"யின் கதை, வசனம், டைரக்ஷன் பொறுப்புகளை சரண் ஏற்றார். இசை: பரத்வாஜ். விக்ரம் ஜோடியாக கிரண் நடித்தார்.
 
12_4_2004 அன்று வெளிவந்த "ஜெமினி", மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதில் இடம் பெற்ற "ஓ, போடு" என்ற பாடல், மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது.
 
"ஜெமினி" படத்துக்கு விநியோக உரிமை பெற்றவர்கள் பெரிய லாபம் அடைந்தனர். போட்ட பணத்தை விட 2 மடங்கு லாபம் கிடைத்தது. முன்னணி நடிகர் சூர்யாவை வைத்து ஒரு படம் தயாரிக்க சரவணன் முடிவு செய்தார். அதுதான் "பேரழகன்". நீண்ட பல் வரிசையுடன் புதுமையான "மேக்கப்" பில் சூர்யா நடித்தார். அவருடைய ஜோடி ஜோதிகா.
 
6_5_2004_ல் வெளிவந்த "பேரழகன்", நூறு நாள் வெற்றி படமாக அமைந்தது.
 
ஏவி.எம். பேனரில் தயாரான மொத்த படங்கள் 166. இதில் தமிழ் 89; இந்தி 27; தெலுங்கு 39; கன்னடம் 9;  சிங்களம் 1; வங்காளி 1. இந்தியாவிலேயே அதிக படங்களைத் தயாரித்த நிறுவனம் ஏவி.எம்.தான்.
 
ஏவி.எம். படங்களை அதிகமாக இயக்கியவர்கள் கிருஷ்ணன் _ பஞ்சு. இந்த இரட்டையர்கள் டைரக்ட் செய்த படங்கள் 21. அடுத்தபடியாக எஸ்.பி.முத்துராமன் 17 படங்களையும், திரு லோகசந்தர் 13 படங்களையும் பீம்சிங் 8 படங்களையும் டைரக்ட் செய்துள்ளனர்.
 
ரஜினிகாந்த் 8 ஏவி.எம். படங்களில் நடித்திருக்கிறார்.  இப்போது ஏவி.எம். நிறுவனம் "சின்னத்திரை" யிலும் முத்திரை பதித்து வருகிறது. இதுவரை 41 தொடர்களை தயாரித்துள்ளது.
 
"சன் டிவி"யில் ஏவி.எம். வழங்கும் "மங்கையர் சாய்ஸ்" தொடர், 1,080 நாட்களைத் தாண்டி இன்னமும் போய்க்கொண்டிருக்கிறது. சரவணன் மகள் உஷா சரவணன், மங்கையர் சாய்ஸ் நிகழ்ச்சி தயாரிப்பை கவனிக்கிறார்.
 
ஒரு நிறுவனம் இரண்டு தலைமுறைகளைத் தாண்டி மூன்றாவது தலைமுறைக்குச் சென்று, வெற்றிகரமாக நடைபெறுவது அரிது. இந்தியாவில் மூன்றாவது தலைமுறையில் வெற்றி நடைபோடும் வெகு சில நிறுவனங்களில் "ஏவி.எம்" ஸ்டூடியோவும் ஒன்று.
 
குறிப்பாக, தமிழ்க் கலைஞர்களின் திறமையை வடநாட்டினர் அறிந்து கொள்ளச் செய்ததில், ஏவி.எம். நிறுவனத்துக்கு கணிசமான பங்குண்டு.
மதிப்பீடு செய்க