வால்மீகி
காதலியால் திருந்தும் திருடன் கதை...
 
பிக்பாக்கெட் திருட்டு செய்யும் இளைஞன் அகில். ஜெயில், கல்லறை தோட்டத்தில் குடித்தனம் என வாழ்க்கை நகர்கிறது. ஒருநாள் கோவில் குளத்தில் பைத்தியத்திடம் சிக்கி உயிருக்கு போராடும் மீராநந்தனை காப்பாற்றுவதுடன் அவர் கழுத்தில் கிடந்த தங்க செயினை அபேஸ் செய்கிறார்.
 
அகில் திருடன் என்பது தெரியாமல் காதல் வயப்படுகிறார் மீரா. இன்னொரு புறம் அகிலுக்கு தங்க இடம் கொடுத்து உதவும் பூக்காரி தேவிகாவும் விரும்புகிறார்.
 
ஒரு கட்டத்தில் அகில் திருடன் என தெரிந்து அதிர்கிறார் மீரா. திருட்டை விட்டு வந்தால் ஏற்பேன் என்கிறார். காதலா? திருட்டா? என்ற போராட்டத்தில் காதலே ஜெயிக்கிறது. உழைத்து வாழத்துணியும் போது மீரா நந்தன் மரணம் சம்பவிக்கிறது. நொறுங்கும் அகில் என்ன முடிவு எடுத்தார் என்பது கிளைமாக்ஸ்.
 
திருடர்களின் வாழ்க்கை, அவர்களிடம் பணத்தை இழக்கும் அப்பாவிகளின் வலிகள் போன்றவற்றை விறு விறுப்பாக தொகுத்துள்ளார் இயக்குனர் அனந்த நாராயணன்.
 
பிக்பாக்கெட் திருடனுக்கு கச்சிதமாக பொருந்துகிறார் அகில். பயணிகளிடம் பிக்பாக்கெட் அடித்து வாயில் பிளேடை கடித்து துளாக்கி துப்பி தப்புவது பரபர....
 
நேசித்த இரு பெண்கள் திருடன் என விலகியதும் முகத்தில் வேதனை பிரதி பலிப்பு.... போலி சினிமா கம்பெனி ஆரம்பித்து பணம் பறித்து ஏமாற்றிய பெண்ணை விலை மாதுவாக பார்க்கும் அகிலுடன் சேர்ந்து எல்லா இதயங்களும் அழுகின்றன. அப்பெண் எனக்கு நோய் வந்து போச்சு சீக்கிரம் செத்துடுவேன். மருவாதையா அடக்கம் பண்ணுவியா? என்று ஏமாற்றியவனிடமே கெஞ்சுவது விழிகளில் நீர்முட்ட செய்யும் கனமான “சீன்”

மீரா நந்தன் அழகாய் பளிச்சிடுகிறார். கோவில் குளத்தில் ஜீவமரண போராட்டத்துக்கு மத்தியில் அகில் மீரா நந்தன் சந்திப்பபு நிகழ்வது... அதுவே கதலாக மாறுவது... மீராநந்தன் அன்பில் நனைந்து பெயரை பச்சை குத்திக் கொள்வது... திருடிய செயினை மீட்டு அவரிடமே ஒப்படைப்பது கவித்துவமான காட்சிகள். அகில் திருந்திய பிறகு மீரா நந்தனை சாகடிப்பது சறுக்கல்.
 
சிறு வயதில் திருடர்களால் குடும்பத்தினர் கூண்டோடு சாகடிக்கப்படும் மீரா நந்தனின் பிளாஷ்பேக் உருக்கம்...
 
வெறுத்து காதல் தோல்வியில் வெறுத்து ஆட்டோ டிரைவரை மணக்கும் தேவிகா மனதில் நிற்கிறார்.
 
அஜய், படவா கோபி, கராத்தே வெங்கடேசன் பாத்திரங்களும் வலுவாக செதுக்கப்பட்டுள்ளன. 
 
திருட்டுத் தொழில் செய்வோரின் வாழ்க்கை நிகழ்வுகளை அசலாக வழங்கியிருப்பதில் இயக்குனரின் திறமை பளிச்சிடுகிறது. வசனங்களிலும் ஜீவன் இழையோடுகிறது. ஆயிரக்கணக்கில் பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டாளிகள் வாடகை வீடு, வசதி கூடஇன்றி கல்லறை தோட்டத்தில் பணத்தை புதைத்து முடங்கி கிடப்பது செயற்கைத்தனம்.
 
இளையராஜா இசையில் பாடல்கள் இனிமை. என்.அழகப்பன் ஒளிப்பதிவு அழுக்கு மனிதர்களின் வாழ்க்கையை அள்ளுகிறது.
மதிப்பீடு செய்க