`கொல கொலயா முந்திரிக்கா'
`வல்லமை தாராயோ' படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமான பெண் டைரக்டர், மதுமிதா. அந்த படத்துக்காக, சிறந்த டைரக்டருக்கான 2 விருதுகள் இவருக்கு கிடைத்தன. இதைத் தொடர்ந்து மதுமிதா, அடுத்து ஒரு புதிய படத்தை டைரக்டு செய்கிறார்.
 
இந்த படத்துக்கு, `கொல கொலயா முந்திரிக்கா' என்று அவர் பெயர் சூட்டியிருக்கிறார். இது, முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படம். `பொய் சொல்லப் போறோம்' படத்தில் நடித்த கார்த்திக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கன்னட நடிகை ஷிகா, இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆகிறார்.
 
இவர்களுடன் ஜெயராம், ஆனந்தராஜ், வாசு விக்ரம், கோட்டா சீனிவாசராவ், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்கிறார்கள். கதாநாயகன் கார்த்திக்குமார், கதாநாயகி ஷிகா, மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர், ஒரு புதையலை தேடி காட்டுக்குள் பயணமாகிறார்கள். அங்கே ஆனந்தராஜ், வாசு விக்ரம், கோட்டா சீனிவாசராவ் ஆகிய 3 வில்லன்களை சந்திக்கிறார்கள். போலீஸ் அதிகாரியான ஜெயராமும் அங்கு வருகிறார். இவர்கள் இடையே நடைபெறும் நகைச்சுவையான மோதல்கள்தான் கதை.
 
சென்னை, காரைக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களில், 62 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கிரிகுஜா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் நளினி சுந்தர்ராமன், திரிசக்தி சுந்தர்ராமன் ஆகிய இருவரும் இந்த படத்தை தயாரிக்கிறார்கள். கிரேசி மோகன் வசனம் எழுதுகிறார். செல்வகணேஷ் இசையமைக்கிறார்.